1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Monday, June 8, 2015

நூடுல்சில் காரீயம் சேர்ந்தால் என்ன?
                                                                                                                               
  பிரபல நிறுவனம்  நெஸ்லே  தயாரிக்கும்  மேகி நூடுல்ஸில் குறிப்பிட்ட வேதிப் பொருள் அதிக அளவில் இருந்ததுடன் அதில் காரீயமும் (lead) கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.  அதைத் தொடர்ந்து தமிழ்நாடு உட்ப்ட சில மாநிலங்களில் அதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது   மேலும் பல மாநிலங்களில் அந்த நூடுல்ஸ் சாம்பிள்கள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் பற்றி செய்தி வெளியிட்ட சில தமிழ் டிவி சேனல்கள் காரீயம் வேறு, ஈயம் வேறு என்பது தெரியாமல் நூடுல்ஸ் சாம்பிள்களில் ஈயம் இருந்ததாகத் தெரிவித்தன. ஒரு பத்திரிகை  lead  என்பதை அலுமினியம் என்று மொழி பெயர்த்தது.

இன்னொரு தமிழ்ப் பத்திரிகையோ உடலில் ஈயம் கலந்தால் ஆபத்து என்பதாக செய்தி வெளியிட்டது. ஈயத்தையும் காரீயத்தையும் குழப்பிக் கொண்டதால் ஏற்பட்ட வினை இது. Lead  என்றால் ஈயம் என்று தவறாகப் புரிந்து கொண்டதே அதற்குக் காரணம்.




  உண்மையில் ஈயம் வேறு, காரீயம் (Lead) வேறு, அலுமினியம் வேறு. ஈயம் என்பது  Tin  ஆகும். ஈயம் உடலுக்கு கெடுதல் செய்யக்கூடியது அல்ல.  Lead  அதாவது காரீயம் கெடுதல் செய்வதாகும்.

காரீயம் நுண்ணிய துகள் வடிவில் காற்றில் கலந்து சுவாசிக்கும் போது உடலுக்குள் சென்றாலும் சரி, தண்ணீர் அல்லது உணவில் கலந்து உடலுக்குள் சென்றாலும் சரி உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும்

காரீயம்   குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கும். காரீயம் காரணமாக மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். உடல் வளர்ச்சி பாதிக்கப்படும்.

பொதுவில் காரீயம் சிறு நீரகம், கல்லீரல் போன்று உடலில் பல உறுப்புகளையும் பாதிக்கக்கூடியதாகும். எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி பாதிக்கப்படும். சில தீங்கான பொருட்கள் உடலுக்குள் சென்றால் காலப் போக்கில் வெளியே கழித்துக் கட்டப்படும். ஆனால் காரீயம் உடலுக்குள் செல்லச் செல்ல மேலும் மேலும் சேர்ந்து கொண்டே போகும்.

  இப்போது ஈயத்துக்கு வருவோம். எவர்சில்வர் எனப்படும்  Stainless Steel  வந்ததற்கு முன்னர் வீடுகளில் சமையலுக்கு பித்தளைப் பாத்திரங்களே பயன்படுத்தப்பட்டன. பித்தளைப் பாத்திரங்களில் உணவை வைத்தால் கெட்டு விடும். ஆகவே பித்தளைப் பாத்திரங்களின் உட்புறத்தில் ஈயம் பூசிப் பயன்படுத்தினர். அந்த நாட்களில் ஈயம் பூசுவதற்கு என்றே தொழிலாளர்கள் இருந்தனர். "ஈயம் பூசலையா" என்று கூவியபடி தெருவில் செல்வர். முற்றிலும் ஈயத்தால் ஆன பாத்திரங்களும் (ஈயச் சொம்பு) இருந்தன.

இதல்லாமல் ஈயம் பூசப்பட்ட தகர டப்பாக்களில் பல பொருட்களும் அடைக்கப்பட்டு விற்கப்பட்டன. ஈயம் உடலுக்கு கெடுதல் செய்கிற உலோகமே அல்ல.

ஆனால் காரீய உலோகம் நிச்சயம் கெடுதல் செய்யக்கூடியது. சிறிதளவு காரீயம் சேர்ந்தால் பரவாயில்லை என்று கூடச் சொல்ல முடியாது. எந்த உணவுப் பொருளிலும் மிகச் சிறு அளவுக்குக் கூட காரீயம் இருத்தல் ஆகாது.

ஒரு காலத்தில் வாஷ் பேசின் குழாய், தண்ணீர் குழாய் போன்றவற்றை செய்ய காரீயம் பயன்படுத்தப்பட்டது.  விளையாட்டுப் பொருட்கள் காரீயம் கலந்த பெயிண்ட் பூசப்பட்டவையாக இருந்தன. டார்ச் செல்கள் காரீயத்தில் செய்யப்பட்டவையாக இருந்தன.

இதல்லாமல் பெட்ரோலில் குறிப்பிட்ட காரணத்துக்காக சிறிதளவு காரீயம் சேர்க்கப்பட்டது. காரீயம்  தீங்கானது என்பது தெரிய வந்ததும் பெட்ரோலில் காரீயத்தைக் கலக்கக்கூடாது என்று மேலை நாடுகளில் தடை விதிக்கப்பட்டது.

அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்தியா போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. உலகில் இன்னமும் சில நாடுகளில் காரீயம் கலந்த பெட்ரோல் விற்கப்படுகிறது.

ஒரு கால கட்டத்தில் காரீயம் எந்த அளவுக்கு உலகைப் பாதித்தது என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கூறலாம். அமெரிக்க விஞ்ஞானி கிளேர் பேட்டர்சன் பூமியின் வயதைக் கணக்கிட மிக வயதான பாறையைத் தேடினார். ஆனால்  அவர் உலகில் எந்தப் பாறையைத் தேர்ந்தெடுத்தாலும் அது காரீயத் துணுக்குகள் படிந்ததாக இருந்தது. உலகில் கார்களிலிருந்து வெளிப்படும் புகையில் அடங்கிய காரீயத் துணுக்குகள் பூமியின் பாறைகளில் படிந்திருந்ததே காரணம். கடைசியில் அவர் விண்ணிலிருந்து விழுந்த விண்கல்லை வைத்துத் தான் பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள் என்று 1956 ஆம் ஆண்டு வாக்கில் கண்டுபிடித்தார்.

அதே பேட்டர்சன் பின்னர் பெட்ரோலில் காரீயத்தைத் கலப்பதைத் தடுக்க வேண்டும் என சர்வ வல்லமை படைத்த பன்னாட்டு பெட்ரோலிய எண்ணெய்க் கம்பெனிகளுக்கு எதிராக பெரிய இயக்கத்தைத் தொடங்கி அதில் வெற்றி பெற்றார்.

பெயிண்டுகளில்   குறிப்பிட்ட அளவுக்கு மேல் காரீயம் இருக்கக்கூடாது என்று அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தடை உள்ளது. இது கண்டிப்புடன் அமலாக்கப்படுகிறது. இந்தியாவில் அப்படி இல்லை.

பெயிண்டுகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் காரீயம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என வெறும் அறிவுரை மட்டும் கூறப்பட்டுள்ளது. நடைமுறையில் அறிவுரை கூறப்பட்ட அளவை விட பல மடங்கு காரீயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட ஜார்ஜ் பவுண்டேஷன் என்னும் அமைப்பு காரீய ஆபத்து பற்றிக் கரடியாகக் கத்தி வருகிறது. 1995 ஆண்டிலிருந்து செயல்படும் அந்த அமைப்பு உடல் நலத்துக்கான செயிண்ட் ஜான்ஸ் அகாடமியுடன் சேர்த்து பல நகரங்களிலும் குழந்தைகளிடம் ரத்த பரிசோதனை நடத்தி வந்துள்ளது.

 பல நகரங்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் இப்படி நடத்தப்பட்ட ரத்த சோதனைகளில் அவர்களில் 51 சதவிகிதத்தினரிடம் ரத்தத்தில் காரீய அளவு அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க, குறிப்பிட்ட பிராண்ட் நூடுல்ஸ் மீது தடை விதிப்பதால் பிரச்சினை தீர்ந்து விடப் போவதில்லை. இந்த நூடுல்ஸ் பற்றிய டிவி விளம்பரங்களில் நடித்த பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாலும் பிரச்சினை தீரப் போவதில்லை.

 இவற்றையெல்லாம் தடுப்பதற்கு ஒருங்கிணைந்த கடுமையான சட்டங்கள் இல்லை .மத்திய அரசிலிருந்து முனிசிபாலிடி வரை ஒவ்வொரு அதிகார அமைப்பும் வெவ்வேறான அதிகாரங்களைப் பெற்றுள்ளன. அகில இந்திய அளவில்  நாடு முழுவதுக்குமாகப் பொருந்துகிற தகுந்த ஏற்பாடு இல்லை. ஆகவே தான் ஒவ்வொரு மாநிலமும் நூடுல்ஸை சோதிக்க தனித்தனியே நடவடிக்கை எடுக்கிறது. .