இளம் கல்வியியல் (பி.எட்.) மாணவர் சேர்க்
கையில் புதிய விதிமுறையைக் கைவிட வேண்டுமென தேசிய அறிவியல் கல்விக் கழகத்துக்கு சாஸ்த்ரா பல்கல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சேதுராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைவருக்கு சேதுராமன் அனுப்பியுள்ள கடித விவரம்:
மத்திய அரசிதழில் 2014-ல் வெளியிடப்பட்ட புதிய ஒழுங்காற்றுச் சட்டத்தில், பி.எட். தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை குறித்த புதிய நிபந்தனையில், கல்வியியல் படிக்க விரும்புவோர், தேசிய ஆசிரியர் கல்விக் குழுவின் (என்.சி.டி.இ.) அங்கீகரிக்கப்பட்ட கல்வி ஆசிரியர் படிப்பை நேருக்கு நேர் முறையில் பயின்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் இதுபோன்ற வற்புறுத்தல், என்சிடிஈ குறிப்பிடும் கல்வித் தகுதி பெறாத, ஏற்கெனவே பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்குத் தடைக்கல்லாகவே இருக்கும். அவ்விதிப்படி தொலைநிலை முறையில் பி.எட். படிப்பை பயில முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் பட்டப் படிப்பு முடித்தவர்களே பெரும்பாலும் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அப்போது ஆசிரியர் கல்வியில் எந்த பட்டயப் படிப்பும் தேவையென்று கட்டாயமாக்கப்படவில்லை. அதுவும் நேருக்கு நேர் பயின்றிருக்க வேண்டும் என்று விதி வரையறுக்கப்படவில்லை.
இப்போது திடீரென ஒரு புதிய வரன்முறையைக் கொண்டு வருவது அவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. புனிதமான ஆசிரியர் பணியைத் தொடர இந்தக் கட்டாய விதிமுறை ஒரு தடையாக உள்ளது.
கல்வியின் தரம் உயர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த விதிமுறையை 1.12.2015க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தலாம். அதற்குமுன் பல ஆண்டுகளாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இது பொருந்தாது என்று அறிவிப்பதே சரியாக இருக்கும்.
மேலும், நேருக்கு நேர் முறையில் ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு முடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது மத்திய அரசின் அரசிதழில் கூறப்பட்டதற்கு முரணாகவே உள்ளது. நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உருவான பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் 1956-ம் ஆண்டு ஒழுங்காற்றுச் சட்டப் பிரிவு 3-ன் படி உருவான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தொலைநிலைக் கல்வி வழியாக வழங்கும் பட்டங்கள் யாவும் வேலைவாய்ப்புப் பெறுவதற்குரிய தகுதியுடையன என்று நாடாளுமன்றச் சட்டம் தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, இது தொடர்பாக புதிய திருத்தம் ஒன்றை உடனடியாகக் கொண்டுவர வேண்டும். இவ்வாறு சேதுராமன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நன்றி--THE HINDU