1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Tuesday, December 15, 2015

வருமான வரி கணக்குத் தாக்கல்: தவறுகளைத் திருத்த என்ன வழி?


  வரி தாக்கல் செய்யும்போது உங்கள் பான் கார்டு எண்ணை ஒருமுறைக்குப் பலமுறை சரிபார்த்தபின் படிவத்தைச் சமர்ப்பிப்பது நல்லது!

குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் அனைவரும் வருமான வரி செலுத்தி, வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது அவசியம். வருமான வரி கணக்கை பலரும் கடைசி நேரத்தில்தான் தாக்கல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படிக் கடைசி நேரத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது தவறு ஏற்பட வாய்ப்புள்ளது.


வரி கணக்கு தாக்கல் செய்யும்போது தவறு நேர்ந்தால், அதை எப்படி திருத்துவது?

முதலில் என்னென்ன தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதைப் பார்ப்போம்.


தவறான படிவத்தைத் தேர்வு செய்வது!


வருமான வரித் துறையில் வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு பல்வேறு படிவங்கள் உள்ளன. வருமான வரி தாக்கல் செய்வதற்கே 9 படிவங்கள் உள்ளன. தேவையின் அடிப்படையில் இந்தப் படிவங்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், வரி தாக்கல் செய்யும் பலருக்கு எதற்கு, எந்தப் படிவம் என்பது குழப்பமாகவே உள்ளது.

நிதி ஆண்டில் குழப்பம்!

வரி கணக்கு தாக்கல் செய்யும்போது பலரும் செய்யும் தவறு, வரி கணக்குத் தாக்கல் செய்யும் வருடத்தைத் தவறாகக் குறிப்பிடுவது. இதனால் வரி கணக்கு தாக்கல் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது, 2014-15-ம் நிதியாண்டுக்கான வரி தாக்கலை 2015 ஆகஸ்ட் மாதத்தில் சமர்ப்பிக்கிறோம் எனில், அந்த நிதியாண்டுக்கான வரி விதிப்பு ஆண்டு (Assessment year) 2015-16 ஆகும். இதை பலர் மாற்றிக் குறிப்பிடுவதால் சிக்கல் உருவாகிறது.

வங்கிக் கணக்கு பற்றிய விவரத்தில் தவறு!

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது அதில் டிடிஎஸ் க்ளெய்ம் அல்லது முன்கூட்டியே செலுத்திய வரி தொகையை க்ளெய்ம் செய்திருப்போம். அதை வருமான வரித் துறை நேரடியாக வருமான வரி கணக்குத் தாக்கல் செய்தவரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும் வசதி உள்ளது. அதாவது, இசிஎஸ் வசதி. எனவே, வங்கிக் கணக்கு விவரத்தை சரியாகக் கொடுப்பது முக்கியம். ஆனால், பெரும்பாலானவர்கள் இதில்தான் தவறு செய்கிறார்கள். எனவே, வங்கியின் பெயர், ஐஎஃப்எஸ்சி கோட், வங்கிக் கணக்கு எண் என அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்வது அவசியம்.

வருமானம் விவரம்!

ஒருவருக்கு வருமானம் என்பது பல்வேறு வழிகளில் வர வாய்ப்புள்ளது. அதாவது, டிவிடெண்ட் வருமானம், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானம், வாடகை வருமானம், வேறு வகையான முதலீட்டின் மூலமாகக் கிடைத்த வருமானம் ஆகியவற்றை வருமான வரி தாக்கலின்போது கணக்கு காண்பிக்க வேண்டும். இதைக் கணக்கு காண்பிக்கவில்லை எனில் அது பொருளாதாரக் குற்றமாகும். இதர வருமானங்களை வேண்டுமென்றே கணக்கு காட்டவில்லை என வருமான வரித் துறை அலுவலர்கள் கண்டுபிடித்தால், 100 - 300% வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இ-தாக்கல் சரிபார்ப்பு!

வருமான வரி தாக்கலை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்த பின் கிடைக்கும் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்டு, வரி தாக்கல் செய்த 120 நாட்களுக்குத் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பது அவசியம். டிஜிட்டல் கையெழுத்து இல்லாதவர்கள்தான் இதை செய்ய வேண்டும்.  வரி தாக்கல் செய்யும்போது பல்வேறு தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. இந்தத் தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வழிமுறைகளும் உள்ளன. அது பற்றி கற்பகம் அண்ட் கோ  ஆடிட் நிறுவனத்தின் பார்ட்னர் ஸ்ரீகாந்த் விளக்கினார்.

“வருமான வரிச் சட்டம் 139(5) பிரிவின் கீழ் திருத்திக்கொள்ள முடியும். இதை வரி விதிப்பு ஆண்டின் இறுதியிலிருந்து அடுத்த ஒரு வருடத்துக்குள் அல்லது அசெஸ்மென்ட் முடிக்கும் முன் ( இதில் எது முன்னதாக நிகழ்கிறதோ) திருத்திக் கொள்ள முடியும். அதாவது, 2015-16-ம் வரி விதிப்பு ஆண்டில் தாக்கல் செய்த விவரங்களில் ஏதாவது மாற்றம் இருந்தால், அதை அந்த ஆண்டின் இறுதியிலிருந்து ஓராண்டுக்குள் அதாவது 31 மார்ச், 2017 அல்லது அசெஸ்மென்ட் செய்யப்பட்ட தேதி, இதில் எது முன்னதாக உள்ளதோ, அந்த தேதிக்குள் சரிசெய்து கொள்ள முடியும். வருமான வரி தாக்கல் செய்த அதே படிவத்தில் மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். மேலும் வங்கிக் கணக்கு எண், முகவரி, மெயில் ஐடி, செல்போன் எண் ஆகியவற்றில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதைத் திருத்தம் செய்யாமல் லாகின் செய்து   மாற்றம் செய்துகொள்ளலாம்.



வரி தாக்கலில் உள்ள மாற்றங்களை ஆன்லைன் அல்லது நேரடியாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்துகொடுக்கலாம். நீங்கள் எந்த முறையில் வரி தாக்கல் செய்தீர்களோ அந்த முறையிலேயே திருத்தம் செய்ய வேண்டும்..

www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் செய்ய முடியும். வரி தாக்கலில் ஏற்படும் தவறுகளை, குறிப்பிட்ட காலவரைக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்த முடியும்.

வரி தாக்கல் செய்யும்போது உங்கள் பான் கார்டு எண்ணை ஒருமுறைக்குப் பலமுறை சரிபார்த்தபின் படிவத்தைச் சமர்ப்பிப்பது நல்லது. ஏனெனில் இதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் வரி தாக்கலே செய்யவில்லை என்றாகிவிடும். மேலும், வருமான வரித் தாக்கலுக்கான கடைசி தேதிக்குப் பின் வரி தாக்கல் செய்திருந்தால், ஏதாவது தவறு ஏற்பட்டால் அதைத் திருத்த முடியாது’’ என்றார்.

வருமான வரிக் கணக்கை குறித்த காலத்துக்கு முன்பே தாக்கல் செய்வதன் மூலமே அதில் தவறுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்க முடியும்!