ஆன்லைன் மூலம் என்பிஎஸ்... இனி ஈஸியா முதலீடு செய்யலாம்!
இன்றைய தேதிக்கு இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல பென்ஷன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்கது நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்) எனப்படும் ஒய்வுக் காலத் திட்டம்தான். இதுநாள் வரை இந்தத் திட்டத்தில் நேரடியாக மட்டும் முதலீடு செய்யும்படி இருந்தது. இப்போது அது ஆன்லைன் மூலமாகவும் முதலீடு செய்கிற மாதிரி மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இனி ஆன்லைனில் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
என்பிஎஸ் திட்டத்தில் வங்கி, நிதி நிறுவனங்கள் அஞ்சலக அலுவலகங்கள் மூலம் முதலீடு செய்யலாம். ஆன்லைனில் முதலீடு செய்ய https://enps.nsdl.com/eNPS/LandingPage.html என்கிற லிங்கை சொடுக்கினால், நேரடியாக இ-என்பிஎஸ்-ன் வலைதளத்துக்கு செல்லும். நீங்கள் புதிதாக பதிவு செய்துகொள்ளப் போகிறீர்கள் எனில், ரெஜிஸ்ட்ரேஷன் (Registration) என்பதற்குள் சென்று, நியூ ரெஜிஸ்ட்ரேஷன் என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். பிறகு, நீங்கள் இந்திய குடிமகனா அல்லது என்.ஆர்.ஐ-யா என்பதைக் குறிப்பிட்டு, டயர் 1 திட்டம் மட்டுமா அல்லது டயர் 1 மற்றும் டயர் 2 திட்டம் இணைந்த திட்டமா என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் பான் எண் மற்றும் எந்த வங்கிக் கணக்கு, என்பிஎஸ் திட்டத்துடன் இணைக்கப்பட இருக்கிறது என்பதையும் சொல்ல வேண்டும்.
தனிநபர் விவரம்!
இப்படி பதிவு செய்யும்போது முதலீடு செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் அதாவது, முதலீடு செய்பவர் பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் கேட்கப்படும். பிறப்புச் சான்றுகளில் (ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, 10, 12-வது பள்ளிக்கூட மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை) ஏதேனும் ஒன்றை அதன் எண்ணுடன் குறிப்பிட்டால், நாம் பதிவு செய்ததற்கான எஸ்எம்எஸ் செல்போனுக்கு வரும்.
முகவரி!
இதில் பதிவு செய்யும்போது தற்காலிக மற்றும் நிரந்தர முகவரிச் சான்று தரவேண்டும். ரேஷன் அட்டை, வங்கி பாஸ் புக், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்திய ரசீது, டெலிபோன் பில் ரசீது, சொத்து மற்றும் வீட்டு வரி ரசீது போன்ற ஆவணங்களை இவற்றுக்காக தரலாம்.
வங்கி விவரம்!
எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் இ-என்பிஎஸ் ஆரம்பித்துவிட முடியும் என்பதில்லை. அலஹாபாத் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, கார்ப்பரேஷன் பேங்க், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், சவுத் இந்தியன் பேங்க் சிண்டிகேட் பேங்க், தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க், லட்சுமி விலாஸ் பேங்க், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற சில வங்கி களோடு மட்டுமே இந்தத் திட்டம் இணைக் கப்பட்டு உள்ளது.
ஃபண்ட் நிறுவனங்கள்!
இதுவரை ஆறு பென்ஷன் ஃபண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களே இதில் உள்ளன. அதில் ஏதேனும் ஒரு நிறுவனத்தை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். நீங்களே முதலீடு செய்வதாக இருந்தால் ஆக்டிவ் திட்டத்தையும், அரசு வழிகாட்டுதல்படி செய்வதென்றால் ஆட்டோ திட்டத்தையும் தேர்வு செய்யலாம். இறுதியாக, புகைப்படம் மற்றும் கையொப்பம் Jpeg ஃபார்மெட்டில் தனித்தனியாக 4 - 12 கேபி அளவில் இருப்பது போல் ஸ்கேன் செய்து குறிப்பிட்ட இடத்தில் அப்லோட் செய்ய வேண்டும்.
பணம் செலுத்துதல்!
நிறைவாக வங்கியின் நெட் பேங்கிங் / டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு மூலம் முதலீட்டுத் தொகையை (குறைந்தபட்சம் ரூ.500) செலுத்தினால் ஆன்லைனிலோ அல்லது மின்னஞ்சலுக்கோ ஒரு வெல்கம் கிட் அனுப்பப்படும். அந்த கிட்டில் பிரான் எண் (PRAN No), IPIN / TPIN எண்கள் வழங்கப்படும். அதோடு என்பிஎஸ் திட்டம் குறித்த விவரங்கள் அடங்கிய கையேடும் இருக்கும்.
தொடர்ந்து முதலீடு செய்ய!
இதில் தொடர்ந்து முதலீடு செய்ய https://enps.nsdl.com/eNPS/LandingPage.html என்கிற லிங்கில் கான்ட்ரிபியூஷன் என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்து பிரான் எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டால், உங்கள் செல்போனுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். அதன்பின் தந்துள்ள வங்கிக் கணக்கின் நெட் பேங்கிங்/ டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு வசதி மூலம் முதலீடு செய்யலாம்.
இனி ஆன்லைனில் ஈஸியாக என்பிஎஸ்-ல் முதலீடு செய்யலாம்!